விவசாயிகள் பிரச்னை தொடர்பான குழுவை கலைக்கக்கோரிய வழக்கு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Jan 20 2021 2:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயிகள் பிரச்னையில் சுமுக தீர்வு காண அமைக்கப்பட்ட குழுவை கலைக்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி சுமுக தீர்வு காணும் வகையில், மத்திய அரசு சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதற்கு எதிராக விவசாய சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ.பாப்டே முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
யாராவது சில கருத்துகள் தெரிவித்தால் அவர்களை குழுவிலிருந்து நீக்கக்கோருவது ஏற்புடையதல்ல என தெரிவித்த தலைமை நீதிபதி, குழு உறுப்பினர்கள் மீது குறை கூற வேண்டாம் எனத் தெரிவித்தார். இந்தக் குழு முடிவெடுக்கும் குழு அல்ல என தெரிவித்த தலைமை நீதிபதி, அக்குழு ஆலோசனை நடத்தி, நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கும் என்றும், அதன்பிறகு நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் கூறினார். ஒட்டுமொத்தமாக அந்தக்குழுவையே கலைக்கக்கோருவது எப்படி நியாயம்? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, இவ்வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து குழுவினர் நடத்தும் கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொள்ள அறிவுறுத்த வேண்டுமென, விவசாய சங்க வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.