ஹரியானாவில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முடிவு - சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரைச் சந்தித்து முறையிடவும் திட்டம்
Feb 23 2021 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹரியானாவில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என ஆளுநரைச் சந்தித்து காங்கிரஸ் கட்சி முறையிட்டுள்ளது.
ஹரியானாவில், மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்து திரு. மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலரும் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தால் அரசுக்கு அளித்த ஆதரவை இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளனர். கூட்டணிக்குள் இருக்கும் மேலும் சில எம்எல்ஏக்களும் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஆளுநரைச் சந்தித்த முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான திரு. பூபேந்தர் சிங் ஹூடா, பா.ஜ.க அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சினையில் மக்களின் ஆதரவை மனோகர் லால் கட்டார் இழந்துவிட்டார் என பூபேந்தர் சிங் ஹூடா விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே, ஹரியானா சட்டப்பேரவையில் அடுத்த மாதம் 5-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.