அசாமில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் சி.ஏ.ஏ. குடியுரிமைச் சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படாது - தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி உறுதி
Mar 2 2021 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என உறுதியளிப்பதாக, அக்கட்சி பொதுச் செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி வாத்ரா தெரிவித்துள்ளார்.
126 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட, வடகிழக்கு மாநிலமான அசாமில், மூன்று கட்டங்களாக பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. 47 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. ஆளும் பா.ஜ.க.,வுக்கும், காங்கிரசுக்கும் இடையே இருமுனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், சோனிட்புர் மாவட்டம் டெஸ்புர் என்ற இடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திருமதி பிரியங்கா காந்தி, அசாமில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றால், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் பெண்களுக்கு, தினக்கூலியாக 365 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அசாமில், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என உறுதிபட தெரிவித்த அவர், மாதம் 200 யூனிட் மின்சாரம் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் திருமதி பிரியங்கா காந்தி வாத்ரா கூறினார்.