இந்தியாவில் பட்டினிச் சாவு இல்லையா என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் - பட்டினிச் சாவுகளை தடுக்க மாதிரி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவு
Jan 18 2022 4:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் பட்டினி சாவு இல்லையா என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், பட்டினிச் சாவுகளை தடுக்க மாதிரி திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதிலும் மக்களின் பசிக்கொடுமையை போக்கவும், பட்டினிச் சாவுகளை தடுக்கவும், சமூக உணவகங்கள் அமைக்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி, அனுன் தவன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாட்டின் எந்த மாநிலத்திலும் பட்டினிச்சாவு நிகழவில்லை என மாநில அரசுகள் தெரிவித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நாட்டில் எங்குமே பட்டினிச்சாவு நிகழவில்லையா? இல்லை என எப்படி கூறமுடியும்? பட்டினிச் சாவு தொடர்பாக மத்திய அரசிடம் அறிக்கை ஏதேனும் உள்ளதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். பட்டினிச் சாவுகளை தடுக்க மாதிரி திட்டம் ஒன்றை உருவாக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அது தொடர்பான பரிந்துரைகளை அனைத்து மாநிலங்களும் பிரமாண பத்திரமாக, 2 வாரங்களில் மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இவ்வழக்கு, 3 வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.