மஹாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, இன்று நடைபெறவிருந்த சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் ரத்து - ஆளுநர் அறிவிப்பு
Jun 30 2022 11:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ராவில் முதலமைச்சர் பதவியை திரு. உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததையடுத்து, இன்று நடைபெறவிருந்த அம்மாநில சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது.
மஹராஷ்ட்ராவில் சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 39 அதிருப்தி எம்.எல்.ஏக்களையும், மீண்டும் தங்கள் வசம் இழுக்க அக்கட்சி தலைமை மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த சூழலில், மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடையில்லை என உச்சநீதிமன்றம் நேற்று இரவு உத்தரவிட்டதைத் தொடர்ந்து திரு. உத்தவ் தாக்கரே உடனடியாக தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, மஹாராஷ்ட்ராவில் இன்று நடைபெறுவதாக இருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை ரத்து செய்து ஆளுநர் திரு. பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்தார். முதலமைச்சர் பதவியில் இருந்து திரு.உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த நிலையில் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.