மங்களூருவில் நிகழ்ந்த ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் - கோவையில் முகமது ஷாரிக் தங்கியிருந்த விடுதியில் கர்நாடகா போலீசார் விசாரணை
Nov 28 2022 9:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி கோவை விடுதி உரிமையாளருக்கு மங்களூரு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருல் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இச்சம்பவம், பயங்கரவாத சதித் திட்டம் என்பது உறுதியானதை அடுத்து, இதுதொடர்பாக என்.ஐ.ஏ. மற்றும் மங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரிக், கோவை வந்ததும், அங்கிருந்த விடுதியில் தங்கி புதிய சிம்கார்டு வாங்கியதுடன், பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கோவை வந்த மங்களூரு போலீசார், கோவை மாநகர போலீசாருடன் ஷாரிக் தங்கிய விடுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும், விடுதி மேலாளர் , பணியாளர்களிடம் ஷாரிக்கை சந்திக்க யாராவது வந்தனரா? அவரின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஷாரிக் செல்போன் தொடர்பில் கோவை நபர்கள் சிலர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் விசாரணை மேற்கொண்ட போலீசார், விடுதியையொட்டி இருந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் கைப்பற்றி சென்றனர். இதனையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி விடுதி உரிமையாளருக்கு மங்களூரு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். முன்னதாக, ஷாரிக்கிற்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், உதகை ஆசிரியர் சுரேந்தரிடம் மங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.