விவசாயத்திற்கு வேளாண் துறை மூலம் ரூ.20 லட்சம் கோடி வரை கடன் வழங்க இலக்கு - வேளாண் துறையை ஊக்கப்படுத்துவதற்கு சிறப்பு நிதியம் உருவாக்கப்படும் என அறிவிப்பு
Feb 1 2023 2:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 20 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளதாக பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார துறையில் நாடு முழுவதும் 157 செவிலியர் கல்லூரிகளும் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு, பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் மீன் வளத்துறைக்கு கடனாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏராளமானவர்கள் கால்நடை வளர்ப்பிலும், பால் பொருட்கள் உற்பத்தியிலும், மீன் வளத்துறையிலும் தொழில் தொடங்க முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பால் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும் போது பால் விலை குறைய வாய்ப்பும், ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் அதிகரிக்கும். அதே போல் கால்நடை வளர்ப்பு மூலம் ஆடு மற்றும் கோழி உற்பத்தி அதிகமாகும் என்றும் கருதப்படுகிறது. அதே போல் மீன்வளத்துறையில் மீனவர்களுக்கு அதிக தொழில் வாய்ப்பு ஏற்படும் என்பதால் அவர்களது வாழ்வாதாரம் உயர வழி ஏற்படும்.
அதே போல் சுகாதார துறையில் நாடு முழுவதும் 157 செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், ரத்த சோகை நோயை வேரறுக்கும் வகையில் புதிய திட்டப்பணி தொடங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திறன் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக மாநில அரசுகள் பஞ்சாயத்து வாரியாக, வார்டு வாரியாக நூலகங்கள் திறக்க ஊக்குவிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.