வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் : நெருக்கடியாக காலக்கட்டத்தில் சுவாமிநாதனின் பணி பல மில்லியன் மக்களின் வாழ்க்கையை மாற்றியதாக புகழாரம்
Sep 28 2023 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் பசுமை புரட்சிக்கு வித்திட்டு பட்டினியை போக்க பாடுபட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நமது நாட்டில் கடினமான காலத்தில் வேளாண்துறையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆற்றிய பங்களிப்பு, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் உணவு பாதுகாப்பையும் பூர்த்தி செய்துள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார். வேளாண் துறைக்கு அவருடைய கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவரது பங்களிப்பு விவசாய துறையில் ஏராளமான ஆராய்ச்சியாளர்களையும் கண்டு பிடிப்புகளையும் உருவாக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்வும் பணியும் வருங்கால தலைமுறைக்கு உந்து சக்தியாக இருக்கும் என்றும் ரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்ட இரங்கல் செய்தியில், பசுமை புரட்சியின் தந்தையான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனின் மறைவு செய்தி அறிந்து தாம் பெரும் வேதனை அடைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் அயராத பணியால் நாடு வேளாண் துறையில் பெரும் மாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், இந்திய வேளாண் புரட்சியின் தந்தையான எம்எஸ் சுவாமிநாதனின் மறைவு செய்தி அறிந்து பெரும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். வேளாண் துறையில் தொடர் வளர்ச்சிக்காகவித்திட்டவர் என்றும், அவரது அயராத பணிகள், உணவு பாதுகாப்பை உறுதி செய்ததுடன், விவசாயிகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் செய்தியில், இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்ற பெருமைக்குரியவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சர்வதேச அளவில் பல விருதுகள் பெற்றவருமான பத்மபூஷன் திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் உலக அளவில் வேளாண் விஞ்ஞானத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ கே வாசன் தெரிவித்துள்ளார். வயது முதிர்வால் காலமான விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் உடலுக்கு ஜி.கே.வாசன் சென்னையில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் பசுமை புரட்சி என்றால் நம் நினைவுக்கு வருவது வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்தான் என்று குறிப்பிட்டார்.