புதுச்சேரியில் முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம்
Dec 6 2018 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதி வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் திரு.நாராயணசாமி உறுதியளித்திருந்தார். அதனடிப்படையில் அதற்கான அனுமதியை அதிகாரிகள் வழங்கவில்லை என கூறப்படுகிறது. முதலமைச்சர் அளித்த உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள், இந்திரா காந்தி சிலை அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டிச் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரணியில் பங்கேற்றவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.