கர்நாடக மாநிலம் கபினி நீர்பிடிப்பு பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என மத்திய அரசு எச்சரிக்கை - அடுத்த 24 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு 6 டி.எம்.சி., வரை நீர்வரத்து இருக்கும் என்றும் தகவல்
Aug 14 2019 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலம் கபினி நீர்பிடிப்பு பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளிலிருந்து அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு தினங்களுக்குள் கல்லணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கபினி நீர்பிடிப்பு பகுதியில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கபினியிலிருந்து காவிரிக்கு அதிக நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதிக நீர் திறக்கப்பட்டால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு 5 முதல் 6 டி.எம்.சி., வரை நீர்வரத்து இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 24,641 கன அடியிலிருந்து, 75 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.