தமிழகத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த கோயில்களில் வெகு விமர்சையாக நடைபெற்ற பால்குடம், கும்பாபிஷேகம், கருட சேவை நிகழ்வு : திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
Jun 9 2023 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறப்பு வாய்ந்த கோயில்களில் பால்குடம், கும்பாபிஷேகம், கருட சேவை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சத்துரு சம்ஹாரக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ படைத்தலைவி அம்மன் கோயிலிலில் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பால்குடம் சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோயில் வாசலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், சேவல் பலி கொடுத்தும் வழிபட்டனர்.
நாகை மாவட்டம் சாத்தங்குடி நந்தவனத்தில் சுக்கிர லிங்கேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து பார்கவ நாயகி உடனுறை சுக்ரலிங்கேஸ்வரர்க்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் சிட்டாங்காடு கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற மாயம் பெருமாள் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அறந்தாங்கி, சிட்டாங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று, கோபுர தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புல்லாக்குட்டை கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த காளியம்மன், விநாயகர், நாகலம்மா கோயில்களின் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்கள் அருள் வந்து ஆடிய காட்சி பரவத்தை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை சார்பில் 89-ம் ஆண்டாக கருடசேவை புறப்பாடு நடைபெற்றது. இதில் 24 கோயில் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, நகரின் நான்கு ராஜவீதிகளில் வலம் வந்தன. ஒரே இடத்தில் எழுந்தருளிய 24 கோயில் பெருமாள்களுக்கும் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
பழனி மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஸ்ரீ சாக்கடை சித்தரின் 7ம் ஆண்டு மகா குருபூஜையை முன்னிட்டு திருச்சியில் சிறப்பு பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. டோல்கேட்டில் உள்ள ஸ்ரீபாம்பாட்டி சித்தர் ஓங்கார குடிலில் நடைபெற்ற பூஜையில், பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.