நவராத்திரி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் கொலு கண்காட்சி : பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது
Oct 11 2018 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரி விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் கொலு கண்காட்சி களைகட்டியுள்ளது. இந்த கொலு கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை கொலு வைத்து வழிபடும் சிறப்பு நிகழ்வாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்களில் துர்கை அம்மனையும், அடுத்த 3 நாட்களில் லட்சுமி தேவியையும், இறுதி 3 நாட்களில் சரஸ்வதி தேவியையும் வழிபடுவார்கள். இந்த ஆண்டு, நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று, பல்வேறு கோவில்களிலும், வீடுகளிலும் நவராத்திரி கொலு சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோவிலில் நூற்றுக் கால் மண்டபத்தில் நவராத்திரி கொலு கண்காட்சி விமர்சையாக நடைபெற்றது. இதில், இதில் 9 வகையான லட்சுமி அவதாரங்கள், கிருஷ்ணர், ராமாயணம், மகாபாரத கதைகள் உள்ளிட்ட கொலு பொம்மைகள் இடம் பெற்றிருந்தன. பல்வேறு அரங்குகளில் அமைக்கப்பட்டிருந்த இந்த கொலு கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஆதிபாரசக்தி கோவிலில் பெண்கள் தீபங்களுடன் ஊர்வலமாக சென்றனர். பிரம்மன், விஷ்ணு, சிவன், மற்றும் முப்பெரும் தேவியர்கள் உள்ளிட்ட தெய்வ வேடங்கள் அணிந்து வந்தவர்களுடன் சேர்ந்து நவராத்திரி அகண்ட தீபம் ஒளி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நவராத்திரி பண்டிகையையொட்டி, ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொழு பொம்மை கண்காட்சி அமைக்கப்பட்டது. இதில் விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு விதமான பொம்மைகள் வரிசையாக அடுக்கி, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வீடுகளில் நவராத்திரையை முன்னிட்டு, பெண்கள் கொழு பொம்மைகள் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர். நாவராத்தியை முன்னிட்டு இறை பாடல்கள் பாடி, வழிபாடு நடத்தி, சுமங்கலி பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் உள்ள மிகவும் பழம்பெரும் வாய்ந்த அருள்மிகு தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடைஅம்மன் திருகோயிலில் நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது. நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான நேற்று, அம்மன் தபசு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக சிறப்பு பூஜைகள் யாகங்கள் அபிஷேகங்கள் நடைபெற்றன.
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் நவராத்திரியை முன்னிட்டு, அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு, மனோன்மணி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதனையொட்டி நந்தி மண்டபத்தில் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் புரட்டாசி மாத நவராத்ரி திருவிழாவை முன்னிட்டு கொலு பூஜை மிக சிறப்பாக தொடங்கியது. விரதம் இருந்த பக்தர்கள் அம்மனுக்கான பக்தி பாடல்களை பாடி பக்தியுடன் வழிபட்டனர்.
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தின் நவராத்திரி கொளு விழா வெகு விமரிசையாக கொண்டாடபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகே உள்ள படவேட்டம்மன் ஆலயத்தில் நவராத்தி விழா நடைபெற்றது. இந்த ஆண்டு முத்தாலம்மன் தோற்றத்தில், படவேட்டம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.