தமிழகத்தில் தொடர்ந்து வேகமெடுக்கும் கொரோனா 2ம் அலை - நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா - மதுரையில் கொரோனா பாதித்த தெருக்களுக்கு சீல் வைப்பு
Apr 8 2021 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது. தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் 523 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை மாநகரப் பகுதியான பேட்டை செந்தமிழ் நகரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள 450 வீடுகளில் உள்ள நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல், பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில், நெல்லை மாவட்டத்தில் 79 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 53 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.