தமிழகத்தில் ஒரே நாளில் 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மேலும் 19 பேர் பலி - சென்னையில் 1,520 பேருக்கு கொரோனா
Apr 8 2021 8:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் புதிய உச்சமாக தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது. பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 6 நாட்களாக தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்து பதிவான நிலையில், இன்று 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 15 ஆயிரத்து 386 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 19 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த 7 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்து பதிவான நிலையில், இன்று ஆயிரத்து 500ஐ கடந்தது. ஒரேநாளில் ஆயிரத்து 520 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்து 869 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8 லட்சத்து 72 ஆயிரத்து 415 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர். சென்னைக்கு அடுத்ததாக கோவை மாவட்டத்தில் இன்று 427 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 398 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொரோனா கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 15 சிறப்பு குழுக்களை அமைத்து, தலைமைச் செயலாளர் திரு.ராஜுவ் ரஞ்சன், அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.