உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் - இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கோஷ்டி மோதலால் அங்கீகார கடிதம் கொடுக்க முடியாமல் அதிமுக வேட்பாளர்கள் தவிப்பு
Jun 29 2022 1:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் செங்கப்படை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அங்கீகார கடிதம் கொடுக்காததால் 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ள தேர்தல் அதிகாரி, தவறும் பட்சத்தில் சுயேட்சை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 17 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 19 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. நேற்று, வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் செங்கப்படை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த ராகிணி தேவி, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் கட்சியின் அங்கீகார கடிதத்தை வழங்கவில்லை. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும். எனவே, சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாக, அங்கீகார கடிதம் வழங்கினால் மட்டுமே இரட்டை இலை சின்னம் வழங்கப்படும் எனவும், தவறும் பட்சத்தில் சுயேட்சை சின்னம் வழங்கப்படும் என்றும், தேர்தல் அதிகாரி இளங்கோ தெரிவித்துள்ளார்.