தமிழகத்தின் கடலோர பகுதிகளில் 2ம் நாளாக இன்றும் 'சாகர் கவாட்ச்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி - கடற்படை வீரர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் பங்கேற்பு
Jun 29 2022 1:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 'சாகர் கவாட்ச்' எனும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி, 2ஆம் நாளாக இன்றும் நடைபெற்றது.
கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும், கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 'சாகர் கவாட்ச்' என்ற பெயரில், கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில், இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய ஒத்திகை பயிற்சி, இன்று மாலை 6 மணி வரை நடைபெறும்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் கடலோர பகுதிகளில் 2ஆம் நாளாக இன்று ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. அப்போது, கடற்படையை சேர்ந்த 8 பேர் இரு குழுக்களாக பிரிந்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் வழியாக படகு மூலம் ஊடுருவ முயன்றபோது அவர்களை போலீசார் கண்டுபிடித்து ஊடுருவலை தடுத்து நிறுத்தி ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இதேபோல், வேதாரண்யம் கடற்பகுதியிலும் 2ஆம் நாளாக ஒத்திகை நடைபெற்றது. ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம் ஆகிய கடற்பகுதிகளில், கடலோர பாதுகாப்பு பிரிவு போலீசார், படகு மூலம் சென்று ஒத்திகையில் ஈடுபட்டனர். முக்கிய சோதனை சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.