தற்காலிக ஆசிரியர் நியமனம் ஆபத்தானது - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து
Jun 30 2022 12:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கு குறித்து தமிழக அரசு உரிய விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை என்றும், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், முறையான வழிகாட்டுதல்கள் இன்றி, தகுதியற்ற தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என குறிப்பிட்டார். இதையடுத்து அரசு தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.