கீழமை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் அனைத்து வழக்குகளின் உத்தரவுகளையும் உடனடியாக நீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Jul 2 2022 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்கு உத்தரவுகளை, உடனடியாக நீதிமன்ற வலைத்தளத்தில் பதிவேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அதிலுள்ள விவரங்களை மறைத்து புதிய மனுத்தாக்கல் செய்து ஜாமின் பெற்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு வழக்கறிஞர் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், உத்தரவுகளை பதிவேற்றம் செய்யாததால் வழக்கின் பழைய நிலைகளை மறைத்து புதிய உத்தரவுகள் பெறப்படுகிறது என நீதிபதி சுட்டிக்காட்டினார். அனைத்து கிழமை நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளின் நிலைமைகளை நீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். உத்தரவை உயர்நீதிமன்ற பதிவாளர் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், ஜாமின் மனுக்கள், முன்ஜாமின் மனுக்கள் மற்றும் தீர்ப்புகள் பற்றிய விவரங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.