கள்ளக்குறிச்சி அருகே அரசு பள்ளியின் அவலநிலை குறித்து தலைமை ஆசிரியருக்கு மாணவி கடிதம்
Jul 2 2022 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி அருகே அரசு பள்ளியின் அவலநிலை குறித்து தலைமை ஆசிரியருக்கு மாணவி ஒருவர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருக்கோவிலூரில் இயங்கி வரும் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் உள்ள கழிவறைகள் பல மாதங்களாக தூய்மைப்படுத்தப்படாத நிலையில் இருந்து வருவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதி இல்லாததாலும் மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழிவறையை சுத்தம் செய்யவும், குடிநீர் வசதியை ஏற்படுத்தி தரவும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் லோகேஸ்வரி என்ற மாணவி, சட்டத்தின் திருப்பெயரால் என தலைப்பிட்டு தலைமை ஆசிரியருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கழிவறையில் தண்ணீர் வருவது இல்லை, துர்நாற்றம் வீசுகிறது, குடிப்பதற்கு குடிநீர் வசதியும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இது அனைத்து மாணவிகளின் குமுறல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.