ட்ரெய்லர் லாரிகளின் சரக்கு வாடகை கட்டணத்தை உயர்த்த உரிமையாளர்கள் கோரிக்கை - சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 6 ஆயிரம் கன்டெய்னர் லாரிகளை நிறுத்தி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
Jul 4 2022 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த 8 ஆண்டுகளாக ட்ரெய்லர் லாரிகளின் வாடகையை உயர்த்தி தராததால் அனைத்து டிரைலர் லாரி சங்கங்களின் சார்பாக சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுக பகுதிகளில் 6 ஆயிரம் ட்ரெய்லர் லாரிகள் நிறுத்தப்பட்டு காலவரையற்ற வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது.
சென்னை துறைமுகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகளும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகளும் இன்று இயங்கவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக இதுவரையிலும் வாடகையை உயர்த்தி தரவில்லை என்றும் தற்போதைய டீசல் விலை உயர்வு காரணமாக நஷ்டம் ஏற்படுவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். எனவே, தங்களது வாடகையை உயர்த்தி தருமாறு கோரி லாரி உரிமையாளர்கள் பல முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்காததால், லாரி உரிமையாளர்கள் இன்று முதல் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கன்டெய்னர் லாரிகள் இயங்காது என அறிவித்திருந்தனர்.
இதனை அடுத்து கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கப்பல்கள் மூலம் வெளிநாட்டுகளிலிருந்து வரும் சரக்கு பெட்டகங்களை இறக்குவதிலும், சரக்கு பெட்டிகளை கப்பல்களில் ஏற்றுவதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் சரக்குகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எண்ணூர் விரைவு சாலை, மஞ்சம்பாக்கம், சத்தியமூர்த்தி நகர், மாதவரம் ஆகிய பகுதிகளில் உள்ள கன்டெய்னர் யார்டுகளிலும், சாலை ஓரங்களிலும் கன்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.