தி.மு.கவை தோற்கடிக்கும் சக்தியாக அ.ம.மு.க வளரும் - தருமபுரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரன் உறுதி
Jul 4 2022 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டக்கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு, பென்னாகரம் சாலை மேம்பாலம் அருகில், மேளதாளம் முழங்கவும், பட்டாசு வெடித்தும் கழகத் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குமாரசாமிபேட்டை பகுதியில், அ.ம.மு.க கொடியினை திரு.டிடிவி தினகரன் ஏற்றிவைத்தார். தருமபுரி மாவட்டம் ஜக்கசமுத்திரத்தைச் சேர்ந்த திரு.லட்சுமணன் - ரேணுகாதேவி தம்பதியினரின் இரட்டைக் குழந்தைகளுக்கு ஹரிஷ் - ஹரிணி என திரு.டிடிவி தினகரன் பெயர் சூட்டினார்.
இதைத்தொடர்ந்து, தருமபுரியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப் படத்திற்கு திரு.டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், தருமபுரி மாவட்டச்செயலாளர் திரு.D.K. ராஜேந்திரன், கழக ஆட்சி மன்றக்குழு தலைவர் திரு.அரூர் முருகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதனிடையே, தருமபுரி மாவட்டம் சவுளூர் பகுதியில் அ.ம.மு.க. கொடியினை திரு.டிடிவி தினகரன் ஏற்றி வைத்தார். இதையொட்டி, திரு.டிடிவி தினகரனுக்கு பட்டாசு வெடித்தும், மேளதாளம் முழங்கியும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.