தென்காசி, சேலம், திருப்பூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் பெரும்புத்தூர், களப்பகுளம், இருமன்குளம், புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலத்தில் காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலை 6 மணிக்கு மேல் பரவலாக கனமழை பெய்தது. சேலம் அஸ்தம்பட்டி, அயோத்தியாபட்டினம், வீராணம் சூரமங்கலம் ஏற்காடு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பூரில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அனுப்பர்பாளையம், காந்திநகர், ஆண்டிபாளையம், கருவம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்காவிற்கு உட்பட்ட பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த திடீர் மழை பொதுமக்களை குளிர்வித்தது.
விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தானிப்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனிடையே, வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.