சீனாவின் 43 செயலிகளுக்கு தடை விதித்த இந்தியா : இந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறியுள்ளதாக சீனா குற்றச்சாட்டு
Nov 26 2020 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் சீனாவின் 43 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த அந்நாட்டு அரசு, இந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
தேச பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி கடந்த ஜூன் 29-ஆம் தேதி சீனாவின் 59 செல்லிடப்பேசி செயலிகளுக்கும், கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி 118 செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக சீனாவின் 43 செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்தது. இதில் அந்நாட்டின் இணையவழி வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் அலி எக்ஸ்பிரஸ், அலிபே கேஷியர், கேம்கார்டு, வீடேட் உள்ளிட்ட செயலிகளும் அடங்கும். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சீனா புதன்கிழமை அதிருப்தி தெரிவித்தது. இதுகுறித்து பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளா் ஜாவோ லீஜியன் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி நிகழாண்டு ஜூன் மாதம் முதல் 4 முறை சீன பின்னணி கொண்ட அறிதிறன்பேசி செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளதாகவும், வெளிநாடுகளில் வர்த்தகத்தில் ஈடுபடும் எங்கள் நாட்டு நிறுவனங்களிடம் சர்வதேச விதிமுறைகளையும், சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டங்களையும் மதித்து செயல்படுமாறு சீன அரசு எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.