அமெரிக்காவில் ஒரே நாளில் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா - நாளுக்கு நாள் வேகம் எடுக்கும் தொற்று
Jan 12 2022 9:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் ஒரே நாளில் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த ஆண்டு மத்தியில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. ஆனால் அதன் பின் மெல்ல மெல்ல கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி இருந்த நிலையில் கடந்த மாதம் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்காவில் பரவிய பிறகு கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள்.
இந்நிலையில் ஒரே நாளில் 13 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. சில மாகாணங்களில் கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை முழுமையாக வரவில்லை என்றும், அந்த அறிக்கைகள் வந்தால் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3-ந் தேதி ஒரே நாளில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது அமெரிக்காவில் தினமும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருவது கவலை அடைய செய்துள்ளது.
இதனிடையே, கனடா நாட்டில் கொரோனா பரவல் அதிதீவிரமாக உள்ளதால், அந்த நாட்டுக்கு அமெரிக்கர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.