உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் உள்ளிட்ட நவ கோபுரங்களையும் தண்ணீர் பீய்ச்சி அடித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான 10 நாட்கள் கொண்டாட்டம் இன்று தொடங்கியது. அதன்படி இன்று காலை கோயிலின் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. அப்போது அரோகரா, அண்ணாமலையார் கோஷங்கள் விண்ணை பிளந்தன. பின்னர், அபிஷேகம், தீபாராதனை முடிந்து, அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதனை தொடர்ந்து, இன்றிரவு நடைபெறும் உற்சவத்தில் வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வருகிறார். தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும், காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி திருவீதி உலா மாட வீதியில் நடைபெறும். விழாவின் 6ம் நாளான வரும் 9ம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளான 10ம் தேதி மகா தேரோட்டமும் நடைபெற உள்ளது. முக்கிய விழாவான மகாதீப பெருவிழா, வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. அன்று, அதிகாலை கோயிலில் உள்ள பரணி தீபமும், மாலை 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படவுள்ளது. மகா தீபத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.