எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா மற்றும் முற்றோதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள விஷார் கிராமத்தில் லோபமுத்ரா சமேத அகத்தியர் மகரிஷி கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோவில் 18 சித்தர்களின் உருவங்களோடு பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் வகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்து அகத்தியர் மகரிஷி கோபுர கலசத்தில் நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பச்சையம்மன் மற்றும் சப்த முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு ஸ்ரீ பச்சையம்மன் மற்றும் சப்த முனீஸ்வரர், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆகிய கோவில்களின் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவர் சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் காமராஜர் பல்கலைக்கழக அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரன் - நாகேஸ்வரி கோவிலில் நூதன அஷ்டபந்தான மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. லிங்க வடிவில் அமைந்துள்ள நாகேஸ்வரர் மற்றும் விநாயகர், முருகன், நாகேஸ்வரி மற்றும் அம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்ற கும்பாபிஷேகம் நடைபெற்றது. காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்திரகோசமங்கை சிவாலயத்தில் உலக நன்மைக்காக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்காலை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் திருஉத்திரகோசமங்கை ஆலயத்தில் உள்ள மாணிக்கவாசகர் சன்னதியில் 58 பதிகங்களில் 651 பாடல்களை இடைவிடாது பாடி முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக நன்மைக்காக நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.