ஆலயங்களில் நடைபெற்ற சித்திரை தேர் திருவிழா, தீ மிதி திருவிழா

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஆலயங்களில் நடைபெற்ற சித்திரை தேர் திருவிழா, தீ மிதி திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மிரட்டுநிலை முத்துமாரி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தும் நோக்கில் பால்குடம், மயில் காவடி, அக்னி காவடி எடுத்து வழிபட்டனர். பின்னர் நடைபெற்ற தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வண்டலூர் சியாமளா சக்தி வாழ் மாரிமுத்து அம்மன் ஆலய தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேள தாளங்கள் முழங்க, காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மாரியம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா வந்து கோவிலுக்கு திரும்பியதும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து குழந்தைகளுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசனம் செய்தனர்.

Night
Day