எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் பிரசித்திபெற்ற ஆலயங்களில் நடைபெற்ற திருவிழாக்களில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தகட்டூர் கிராமத்தில் உள்ள பைரவநாதசுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பைரவநாதசுவாமி எழுந்தருள, திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் சித்திரை திருத்தேர் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் ஸ்ரீகைலாசநாதர் எழுந்தருளினார். தொடர்ந்து, திரளான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பிரசித்திப்பெற்ற பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் தேரில் ஸ்ரீ விநாயகர் சுவாமியும், 2வது தேரில் நஞ்சுண்டேஸ்வரர் மற்றும் தேவகிரி அம்மனும் எழுந்தருளினர். முருகன், வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் 3வது தேரில் எழுந்தருளினார். அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் எழுந்தருளிய சுவாமியை பெருந்திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஈரோடு தென்கரையில் உள்ள கொண்டத்து சமயபுரத்து மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவத்தின் பத்தாவது நாள் வைபவத்தில், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, ஐயங்குளத்தில் குளத்தில் தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெற்றது, பின்னர் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்துள்ள நாணப்பரப்பு மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. சுமார் 20 அடி நீளம் கொண்ட குண்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கதர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
அரியலூர் அருகே அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள 23 அடி உயர முருகன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பாகம்பிரியாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற 504 மாவிளக்கு பூஜையில் ஏராளமான சுமங்கலி பெண்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.
தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஆற்றங்கரையில் இரு ஊரைச் சேர்ந்த மக்களுக்கும் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள், முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள பிரசித்திபெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் திருமண நிகழ்வைக் கண்டு தரிசனம் செய்தனர்.