இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சௌதி அரேபியாவில் பிறை தென்பட்டதையடுத்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில் ஜாக் கமிட்டி சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் புத்தாடை அணிந்து பங்கேற்று ஒருவொருவை கட்டித்தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். 

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் ஒரே இடத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏர்வாடி, வள்ளியூர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். 

ராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடை பகுதியில் உள்ள சந்தை திடலில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, அனைவரும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல், தொண்டி பகுதியில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

ரம்ஜானை முன்னிட்டு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜாக் அமைப்பினர் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. எல்லிஸ்நகரில் உள்ள திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு சிறப்பு துஆ செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை பாபா காசிம் பள்ளி வாசல் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஏராளமானோர் புத்தாடை அணிந்து குடும்பத்தோடு பங்கேற்று சிறப்பு துஆ செய்தனர்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் ரேணுகா நகர் வளாகத்தில் உள்ள பெருநாள் திடலில் ஜாக் அமைப்பு மற்றும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நாட்டு மக்களுக்காகவும், ஒற்றுமையுடன் வாழ வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஜாக் அமைப்பு சார்பில் நடைபெற்ற தொழுகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். இதேபோல் பழந்தெரு, வெங்காயக்கார வீதி, மஞ்சக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.


Night
Day