கல்லறை திருநாள் அனுசரிப்பு - கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் உயிரிழந்தவர்களின் கல்லறைக்கு சென்று மலர்வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் திரளான கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கிறிஸ்தவர்களது கல்லறை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ஆம் தேதி  அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கீழ்பாக்கம், டி.பி.சத்திரம் கல்லறை தோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் உயிரிழந்தவர்களின் கல்லறைகளுக்கு சென்று மாலை அணிவித்தும், மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர். திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டதால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

கல்லறை திருநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று உறவினர்கள் மலர்தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர். கல்லறை திருநாளன்று முன்னோர்கள் மற்றும் உறவினர்கள் நினைவாகவும் அவர்களின் ஆத்மா சாந்தி பெற உறவினர்கள் பிரார்த்தனை செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்கள் மற்றும்  உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்கள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோன்று, வேளாங்கண்னி ஆர்ச் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வழிபாடு நடைபெற்றது.  இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

உலக ஆத்மாக்களின் தினமான கல்லறை திருநாளையொட்டி புதுச்சேரியில் உள்ள ஏராளமான கல்லறை தோட்டங்களில் மலர்களால் பூஜித்து தங்களின் முன்னோர்களுக்கு கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். உப்பளம், முத்தியால்பேட்டை, உழவர்கரை,  வில்லியனுர், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் வண்ண வண்ண பூக்களை கொண்டு கல்லறையை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Night
Day