எழுத்தின் அளவு: அ+ அ- அ
கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை மீது ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று பரணி தீபம் ஏற்றப்படும் நிலையில், அதனை காண 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் திருவண்ணாமலை மலையில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த நிலையில், பரணி தீபத்தை காண பக்தர்களுக்கு அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பதை புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுனர்கள் அண்ணாமலையார் மலை மீது ஆய்வு செய்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு அறிக்கை சமர்பித்தனர். அதில், மலையில் இன்னும் ஈரப்பதம் உள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனவும், பரணி தீபத்தை சுமந்து செல்லும் ஊழியர்கள் 300 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கவும் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. இதனால், இந்தாண்டு பரணி தீபத்தை காண பக்தர்களுக்கு அனுமதி மறுத்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.