கிறிஸ்தவர்களின் தவக் காலமான சாம்பல் புதன் தொடங்கியது - தேவாலயங்களில் பிரார்த்தனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள்  தவக்காலமான சாம்பல் புதன் துவங்கியதை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள்  தவக்காலமான  சாம்பல்புதன் துவங்கியதை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலயத்தில்  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது . இந்தப் பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க பேராலயமான நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில்  சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலி  நடைபெற்றது. கோட்டாறு மறைமாவட்ட பேராயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு நெற்றியில் சாம்பல் பூசி தவ காலத்தை தொடங்கினர்.

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் அதிகாலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.  திருப்பலிக்கு பின் கிறிஸ்தவர்களுக்கு நெற்றியில் சாம்பலை கொண்டு சிலுவை அடையாளமாக பூசப்பட்டது. இதேபோன்று தூத்துக்குடியில் உள்ள திரு இருதய ஆலயத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி  நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

சாம்பல் புதனை யொட்டி புதுச்சேரியில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுடன் திருப்பலி நடைபெற்றது. புதுச்சேரி, உழவர்கரை பகுதியில் உள்ள புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று தவக்காலத்தை தொடங்கினர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், சுரண்டை , பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களது நெற்றியில் சாம்பலால் சிலுவையை அடையாளமாக பூசிக்கொண்டு இயேசு கிறிஸ்துவை வழிபட்டனர்.


Night
Day