கிறிஸ்துமஸ் பெருவிழா - விளக்குகளால் மிளிரும் தூய மரியன்னை தேவாலயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி, மதுரை கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள தூய மரியன்னை தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகளால் தூய மரியன்னை ஆலயம் ஜொலிக்கும் பருந்து பார்வை காட்சிகள், காண்போரின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளன.

மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த புனித மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. தேவாலய பங்குத்தந்தை அருள்தந்தை ஹென்றி ஜெரோம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு மதத்தினர் கலந்து கொண்டனர். தேவாலய பங்குத்தந்தை இந்து மற்றும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு கேக்குகளை ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு புனித மரியன்னை தேவாலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே 500க்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் ஊர்வலம் ஆடல், பாடல்களுடன் உற்சகமாக நடைபெற்றது. ஐக்கிய இளைஞர் பேரவை சார்பில் கருமா விளையில் கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் ஊர்வலம் நடைபெற்றது. 500க்கும் மேற்ப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஒரே நேரத்தில் விதவிதமான வாகனங்களிலும், மாட்டு வண்டிகளிலும் ஆட்டம் பாட்டத்துடன் கிறிஸ்து பிறப்பு பாடல்களுடன் பொதுமக்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கி ஊர்வலம் உற்சாகமாக நடைபெற்றது. இதனை ஏராளமான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இருளர் சமுதாய மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவன அறக்கட்டளை சார்பில் 200 பேருக்கு பிரியாணி, கேக் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மானாம்பதி கிராமத்தில் இருளர் சமுதாய மக்கள் 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவன அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பெண்மணிகளுக்கு புடவை, பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி, கேக் உள்ளிட்டவைகளை வழங்கினர். அவர்களுக்கு இருளர் சமுதாய மக்கள் நன்றி தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அறந்தாங்கி பெரிய பள்ளிவாசல் ஜமாத் துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பொதுமக்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டது. 

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் ஜிங்கிள் மிங்கிள் "கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்" நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் இயேசு பிறப்பு குடிலை திறந்து வைத்தார். 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் தேவதை வேடமணிந்தும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தும் வலம் வந்தனர். 150 கேக்குகள் வெட்டப்பட்டு, வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் அழகான கைவினை பொருட்களை காட்சிப்படுத்திய மாணவிகளுக்கு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து திருவண்ணாமலையில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாகையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பொரவச்சேரியில் உள்ள ஆண்டவர் செவிலியர் பயிற்சி கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவில் கிறிஸ்து பிறப்பு குறித்து நாடகம், சிறப்பு பாடல்கள் மற்றும் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து சாண்டா கிளாஸ் பொம்மையுடன் வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் நடனமாடியது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதன்பின்னர் கிறிஸ்மஸ் கேக் வெட்டி மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. 

Night
Day