எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Roll visuals
திருவொற்றியூர் வட குரு ஸ்தலமான தட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக தட்சிணா மூர்த்திக்கு 108 மூலிகைகள் மற்றும் விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் எல்லைக்குட்பட்ட கீழையூர் பகுதியில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை ஸ்ரீ வேதநாத ஈஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள குருயோக தட்ஷிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி மஹா யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 9 அடி உயரம் கொண்ட குருயோக தட்ஷிணாமூர்த்திக்கு பால், பழம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் பூ மாலை அலங்காரத்துடன் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோளறுபதி நவக்கிரக கோட்டை கோவிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா ஆயிரத்து 8 தீர்த்த கலச அபிஷேக பூஜையுடன் தொடங்கியது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று புனித தீர்த்தத்தால் குருபகவானுக்கு பரிகாரம் செய்து வழிபாடு நடத்தினர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் நடைபெற்ற குருபெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். புனித நீர் குடங்களுடன் கோவிலை வலம் வந்து குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானை தரிசித்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கமலாம்பிகை சமேத ஸ்ரீ காயரோகணேஷ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விமரிசையாக நடைபெற்றது. உற்சவர் குரு பகவான் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். குரு பெயர்ச்சியையொட்டி ஏராளமான பக்தர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. தக்ஷிணாமூர்த்திக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதை தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பிரசாதமாக செலுத்திய சுண்டல் மற்றும் உலர்ந்த திராட்சைகளை கொண்ட மாலை சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது.
காரைக்காலில் உள்ள ஸ்ரீ தேனாமிர்தவல்லி சமேத ஸ்ரீ யாழ்முரி நாத சுவாமி கோயிலில் குரு பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடந்தது. சுவாமி, அம்பாள் மற்றும் தட்சணாமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்றது. வெள்ளி அங்கி அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.