சங்கர ராமேஸ்வரர் ஆலய ஐப்பசி திருக்கல்யாண வைபவம் 6ம் நாள் விழா

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் நடைபெற்ற கொடியேற்றம், திருக்கல்யாணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் மேட்டுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள சித்தி வளாகத்தில் சன்மார்க்க கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் முழுவதும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சன்மார்க்கக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. சன்மார்க்க அன்பர்கள் திருவருட்பா பாடல்களை பாடி மஞ்சள் வெள்ளை வர்ணம் பொருந்திய கொடியை கொடி மரத்தில் ஏற்றினர். கொட்டும் மழையிலும் பக்தர்கள் குடை பிடித்தபடி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி என்றபடி வழிபாடு செய்தனர்.

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய ஐப்பசி திருக்கல்யாண வைபவத்தின் ஆறாம் நாள் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பாகம்பிரியாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்தில் மகேஸ்வரி அலங்காரத்தில  எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு தீபாராதனைகளுக்கு பின்பு வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஏழாம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கடலாடி பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலை முன்பாக பெண்கள் 508 திருவிளக்கு பூஜை ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர். முன்னதாக பள்ளி சிறுமிகள் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாற்று கதாபாத்திரங்களை வில்லுப்பாட்டு பாடி போற்றி மகிழ்ந்தனர். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் திருவுருவப்படத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு புரட்டாசி மாத பௌர்ணமி அன்று கிரிவலம்  சென்ற பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்து உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. பௌர்ணமி அன்று வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்கம் வெள்ளி போன்றவற்றை உண்டியலில் செலுத்துகிறார்கள். அந்த வகையில் பக்தர்கள் 2 கோடியே 71 லட்சம் ரொக்க பணமும், 110 கிராம் தங்கமும், ஆயிரத்து 150 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி தெரிவித்தார்.



Night
Day