எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் தீட்சிதர்கள், கோவில் முன்பு தடுப்புகள் அமைத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவில் வளாகம் முன்பு உள்ள கொடிமரத்தை புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று கொடி மரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டதற்கு தீட்சிதர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் சுப்பிரமணியன், உதவி ஆணையர் சந்திரன், ஆய்வாளர் சீனிவாசன், நகை மதிப்பீட்டாளர் ஹரிகரன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் புதிய கொடிமரத்தை மாற்ற வருகை தந்தனர். அப்போது, அவர்களிடம் கோயில் தொடர்பான தீர்ப்புகளை சுட்டிக்காட்டி கோயில் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கொடி மரத்தை தற்போது உள்ளதைப் போலவே மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக்கூறி தீட்சிதர்கள், கொடி மரத்தில் புதிதாக வளையம் போன்றவற்றை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து இரு தரப்பினரிடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் முகப்பில் தடுப்புகளை வைத்து அடைத்த பொது தீட்சிதர்கள். நீதிமன்ற உத்தரவு வரும் வரை கொடிமரத்தில் எந்தவித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தடுப்புகளை அகற்றிய தீட்சிதர்கள், மீண்டும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.