ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் பட்டினப்பிரவேசம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கும்பாபிஷேகம், கொடியேற்றம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குப்பிளிபட்டியில் ஆண்டிச்சாமி, பெரிய கருப்பசாமி, பிடாரியம்மன் கோயில்களின் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த  பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கோவிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்று கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் ஞானாம்பிகை உடனுறை ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயத்தில்  வைகாசி பெருவிழா பட்டினப்பிரவேசம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்திற்கு அருகே எழுந்தருளினர். அங்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வேதியர்கள் மந்திரம் ஓத மங்கள வாத்தியம் முழங்க ஆலய கொடி மரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. இதில் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் கருமலை அய்யன் சுவாமி, பிதிரை அம்மன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தகுடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி ஆதிபராசக்தி என விண்ணை முட்டும் கோஷத்துடன் அம்மனை வழிபட்டனர். 

திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் பிச்சாண்டார் கிராமத்தில் உத்தமர் கோவிலில் பிச்சாண்டேஸ்வரர் திருவீதிஉலா விமரிசையாக நடைபெற்றது. வெள்ளிக்கவசம் அணிந்து, சிறப்பு அலங்காரத்துடன் பிச்சாண்டேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலிக்க திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க பிச்சாண்டேஸ்வரர் திருவீதி உலாவில் நடைபெற்றது. வீதிகள்தோறும் செல்லும் பிச்சாண்டேஸ்வரருக்கு பூ, பழங்கள், பச்சரிசி, வெல்லம் உள்ளிட்டவைகளை பக்தர்கள் வழங்கி பிச்சாண்டேஸ்வரர் அருளைப் பெற்றனர்.

புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் அமைந்துள்ள ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவிலில் வசந்த உத்ஸவ விழாவையொட்டி புஷ்ப அலங்கார மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வசந்த உத்ஸவ விழாவையொட்டி ராமர், சீதா பிராட்டிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. முதல்நாள் வசந்த உற்சவத்தையொட்டி பல்வேறு மலர்களால் புஷ்ப அலங்கார மண்டபத்தில் ராமர் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமரை வழிபட்டனர்.


Night
Day