எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரையில், லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
சித்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி, மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரையில் எழுந்தருளி வைகையாறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை தமுக்கம் பகுதி தொடங்கி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிகளில் வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.
வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார். வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றியும், தண்ணீரை பீய்ச்சியடித்து பக்தர்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து, கோவிந்தா, கோவிந்தா என லட்சக்கணக்காண பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை பிளக்க, தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்றில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர், தங்க குதிரையில் கள்ளழகர் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் வீரராகவப்பெருமாள் மண்டகப்படிகளில் கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஓரு மணி நேரத்திற்கு மேலாக தீபாராதனைகள் நடைபெற்றன.
கள்ளழகர் வைகையாற்றில் நிகழ்வில், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் மற்றும் நடிகர் சூரி, பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது, நடிகர் சூரியுடன் பக்தர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2 டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் மேம்பாலம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முதல் அதிகாலை வரை மின்னொளியில் ஜொலித்தது. விழாவில் பங்கேற்க மதுரை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததால், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.