எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் நடைபெற்ற சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தந்தி மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக வீதியுலாவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கிரிவலப் பாதையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் ஆயிரத்து எட்டு பால் குட ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு நடைபெற்ற பால்அபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
விடுமுறையொட்டி முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது மழையையும் பொருட்படுத்தாமல் கடலில் குளித்து பக்தர்கள் புனித நீராடினர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள மாவூற்று வேலப்பர் கோவிலின் சித்திரை திருவிழாவின் முதல் நாளையொட்டி பக்தர்கள் காவடி எடுத்தனர். இதற்காக ஆண்டிப்பட்டியிலிருந்து கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கிரிவலப்பாதையில் நாட்டியம் ஆடியவாறு பரதநாட்டிய குழுவினர் கிரிவலம் மேற்கொண்டனர். சென்னை மதுரவையிலை சேர்ந்த பரதநாட்டிய குழுவை சேர்ந்த 11 நபர்கள் உலக நன்மைக்காகவும், பாரம்பரிய கலையான பரத நாட்டியத்தை வளர்க்கவும் 14 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர்.
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கரூரில் உள்ள கற்பக விநாயகருக்கு ஆயிரத்து எட்டு கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற தீபாராதனை நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வில் பூ கொட்டும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளிய அண்ணாமலையாரை திரளானோர் தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தென்காசியில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். பின்னர் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் செட்டிகுளம் வடகரையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலின் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அலகு குத்தி, காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள ஆஞ்சநேயருக்கு ஆயிரத்து எட்டு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற தீபாராதனை நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.