தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்கள் : பக்‍தர்கள் சுவாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்ற விழாக்களில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, சக்தி அழைத்தல், பூஜை கூடை, கும்பம் புறப்பாடு உள்ளிட்டவை நகரின் முக்‍கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்‍கு கொண்டுவரப்பட்டன. இதனைத் தொடர்ந்து அம்மனுக்‍கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் புத்தூர் கிராமம் அருகே முக்காணியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காள ஈஸ்வரி மற்றும் மாசாணி அம்மன் ஆலயத்தில் சித்திரை அம்மாவாசையையொட்டி, பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பெண்கள், பால்குடம், அக்‍னி சட்டி ஏந்தி கோயிலுக்‍கு ஊர்வலமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து விரதமிருந்த பக்‍தர்கள் கோயில் முன்பு அமைக்‍கப்பட்ட குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்‍கடன் செலுத்தினர். 

திருவண்ணாமலை மாவட்டம் மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் தாலாட்டு வெகு சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்களுக்‍கு பின்னர் முத்துமாரியம்மனை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவில் சுற்றி வலம் வந்ததைத் தொடர்ந்து ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனையடுத்து அம்மனுக்‍கு மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனர்.

கள்ளக்‍குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள உள்பேட்டை அங்காளம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசையையொட்டி ஆயிரத்து எட்டு தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்‍கப்பட்டது. தொடர்ந்து பக்‍தர்கள் தீச்சட்டிகளை தலையில் சுமந்து பக்‍தி கோஷங்கள் எழுப்பி கோயிலுக்‍கு ஊர்வலமாக கொண்டு வந்து நேர்த்திக்‍கடன் செலுத்தினர். 

சித்திரை திருவிழாவையொட்டி, பெரம்பலூர் அடுத்துள்ள சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்‍தர்கள் வழங்கிய பூக்‍கள் அலங்கார ஊர்திகளில் கோயிலுக்‍கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன. மலர்களால் அம்மனுக்‍கு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து பக்தர்களுக்‍கு பூக்‍கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பெரியநாயகி அம்மன் சிலை, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் சென்ற வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சித்திரை திருவிழா தொடங்கியது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான கரகம் எடுத்தல் அலகு குத்துதல் நிகழ்ச்சி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது விமான அலகில் பக்தர்கள் 3 பேர் கிரேனில் தொங்கியபடி சென்று நேர்த்திகடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேங்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் இறுதி விழாவான பாரிவேட்டை திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், காவலர் வேடமிட்டு விலங்குகளின் உடையணிந்து வேல், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டி. செல்லாண்டிபாளையம் பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ பகவதி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சிவாச்சாரியார்கள் உதிரி பூக்களால் நாமாவளி கூறினர். தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மேச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் ஊஞ்சலில் அமர வைத்து பம்பை உடுக்கை, மங்கல வாத்தியங்கள் முழங்க தாலாட்டு பாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.


Night
Day