தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற திருவிழாக்கள் : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் வீரராகவப் பெருமாள் திருக்கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கனகவல்லி தாயாருடன் வீரராக பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிதந்தார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்,

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே  வன்னியடி கிராமத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. அதன்படி கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தின் எதிரே அம்மன் எழுந்தருள, விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீமிதித்து, நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி  மாவட்டம் முடியனூர் கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் தூக்குத்தேர் திருவிழா  நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திரௌபதி அம்மன் மற்றும் அர்ஜுனன் சிலைகள் சுமார் 60 அடி உயரமுடைய தூக்குத்தேரில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமார் 8 டன் எடையுள்ள தேரை தோளில் சுமந்து கோவிந்தா கோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிறை மீட்ட அய்யனார் படைத்தலைவி அம்மன் கோவிலில் புரவி எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன்படி புரவி பொட்டலிலிருந்து ஒரு அரண்மனைப்புரவி மற்றும் 5 நேர்த்திக்கடன் புரவிகளை தோளில் சுமந்தபடி, கோவிலுக்கு தூக்கி சென்று பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். 

மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகா பெரியவா 130வது ஜெயந்தி விழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. இதில் மகாபெரியவா விக்ரகத்துக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைப் பெற்றது. தொடர்ந்து  ருத்ரா அபிஷேகம் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 

பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி கிராமத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் திருதேர் திருவிழா நடைபெற்றது. அதன்படி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில்  தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் மூன்று படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கோடை விடுமுறை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக கேரள மாநிலம் திரூச்சூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் கேரள பாரம்பரிய முறைப்படி உடையணிந்து மலையாள மொழியில் முருகன் பாடலை பாடி சாமி தரிசனம் செய்தனர் .

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மலர் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட லட்சகணக்கான மலர்களை கொண்டு முருகனுக்கு சிறப்பு மலர் வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பங்கேற்று குறிஞ்சி ஆண்டவர் முருகனை வழிபட்டனர் .

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பாப்பாகுடிபட்டியில் அமைந்துள்ள முத்தையா அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. முன்னதாக புனித நீர் தீர்த்த குடங்களுடன் கடம் புறப்பாடாகி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி வந்து  கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுரத்தின் உச்சியின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள்  சாமி தரிசனம் செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை அருகேவுள்ள பங்களாப்பட்டியிலுள்ள செல்லாயி அம்மன் கோவிலில் கருப்பணசாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, கருப்பணசாமி அரிவாளில் ஏறி ஆடியும், சாட்டையால் அடித்தும் அருள்வாக்கு கூறியும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

 சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை அழகிரி நாதர் திருக்கோவில் வைகாசி விசாகம் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பல்வேறு விதமான வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அழகிரிநாதர் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள்   கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் கருணா சுவாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு கோலாகலமாக தொடங்கியது. அதன்படி அம்பாளுடன் கருணா சுவாமி கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி திட்டை, களக்குடி, கீழவாசல், கூடலூர்‌ உட்பட ஏழு ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்.

கரூரில் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன்படி மாரியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிம்ம வாகனத்திலும் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

 

Night
Day