தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பங்குனி உத்திரம் முன்னிட்டு அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் காவடி சுமந்தும் பால்குடம் ஏந்தியும் கிரிவலம் வந்தனர். பின்னர், சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் பெருந்திரளாக குவிந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து கடலிலும், நாழிகிணற்றிலும் பக்தர்கள் புனித நீராடி குடும்பத்துடன் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான கும்பகோணம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு மூலவர் மசுவாமிநாத சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரோகரா முழக்கங்களுடன் சுவாமி தரிசனம் செய்தும் நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா நடைபெற்றது. சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாண உற்சவம்  நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே, முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்க தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள கம்பத்திலையனார் முருகனுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் செய்து, மலர்மாலை அணிவித்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. தொடர்ந்து முருக பக்தர்கள் காவடிகளை எடுத்து, பக்தி முழக்கத்துடன் கோவிலின் நான்கு மாட வீதிகளை பக்தர்கள் சுற்றி வந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்து எட்டு காவடி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள், காவடியில் கொண்டு வந்த பால், பன்னீர், இளநீர் ஆகியவற்றின் மூலம் சுப்ரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும், விழாவில், 2 வயது குழந்தை கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் காவடி எடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரசித்தபெற்ற முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மனை வழிபட்டு பிரார்த்தனை செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் பிரசித்தி பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூமிதேவி சமேத பரிமள ரங்கநாதர் அலங்கரிக்கப்பட் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.


Night
Day