எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோவில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகம் மற்றும் விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாரதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடியதுடன், நாழிக்கிணறு தீர்த்தத்திலும் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மேளதாளங்கள் முழங்க சுப்ரமணியசுவாமி மற்றும் தெய்வானைக்கு சிறப்பு பூஜை நடத்தினர். அதன் பின் முருகப்பெருமான் தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவில் வாசலிலிருந்து புறப்பட்ட தேரை வெற்றிவேல் முருகனுக்கு "அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா" என்று கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஸ்ரீ வல்லத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகங்கள் நடத்தி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் ஸ்ரீ வல்லத்தம்மன் சிறப்பு அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்காலை அடுத்த நிரவி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர், வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.