தமிழகத்தில் கோயில்களில் நடைபெற்ற திருவிழாக்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் நடைபெற்ற திருவிழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆலயத்தில் உலக நன்மைக்காகவும், வெயில் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபடவும் சஞ்சீவி மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. பின்னர் பட்டாச்சார்யர்களால் அனுமன் மூலமந்திரம் ஆயிரத்து எட்டு முறை பாராயணம் செய்யப்பட்டு மஹாபூர்ணாஹுதியுடன் ஹோமம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் ஆஞ்சநேயரை வணங்கி சென்றனர். 

நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷே ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக 6ம் நாள் திருவிழாவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் அன்ன வாகனத்தில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் மா, பலா, வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் வீற்றிருக்க கோயிலை சுற்றிய நான்கு வீதிகளிலும் தேர் ஆடி அசைந்து பவனி வந்த காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கூட்டு வழிபாட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வேட்டுவர் தெருவில் உள்ள சந்தி வீரப்பன் கோவில் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக மஞ்சளாற்று கரையில் சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு வான வேடிக்கையுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மாரியம்மன் கோவில் 
பங்குனி பொங்கல் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பங்குனி பொங்கல் திருவிழாவில் எட்டாம் நாள் திருவிழாவான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.  இதில் குழந்தைகள் பெண்கள், முதியவர்கள், திருநங்கைகள் என 500க்கும் மேற்பட்டோர் பூக்குழியில் இறங்கி சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day