தமிழகத்தில் நடைபெற்ற திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் நடைபெற்ற திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை திருவள்ளுவர் நகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் 49-வது உற்சவ திருவிழா விமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் சிலர் நேர்த்திக்கடனாக தீச்சட்டி ஏந்தி வீதிகளில் வலம் வந்தனர். அதனை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்தும், 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் பூக்குழி இறங்கினர். 

அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை சிவதாண்டேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பைரவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் மீன பரணி தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மன்கள் கோயிலில் இருந்து செண்டை மேளம், பஞ்ச வாத்தியம் முழங்க முத்து கொடை ஏந்தி ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வாணவேடிக்கை முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தாணிக்கோட்டகம் கிராமத்தில் உள்ள கோடியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. குழந்தை பாக்கியம் வேண்டிய பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதற்காக 300க்கு மேற்பட்ட வாழைத்தார்களை காணிக்கையாக கோவிலில் கட்டி நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து குதிரை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் கோவிலில் காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கால பைரவருக்கு அபிஷேக பொடி, எலுமிச்சை பழம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கால பைரவருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என கோஷமிட்டு வணங்கினர். 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு நடத்தினர். பின்னர் ரதத்தில் வைத்து உற்சவர் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ரதத்தின் இருபுறமும் நின்று தீப்பந்தம் பிடித்து கோவிலை சுற்றி வந்து அம்மனை வழிபட்டனர்.

Night
Day