திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு... பக்தர்கள் பரவசம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது. கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷம் விண்ணைப்பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

108 வைணவத்தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று நடைபெற்றது. இதனையொட்டி, நள்ளிரவு 12.02 மணிக்கு சுப்ரபாத சேவை முடிந்த பின் ஏழுமலையானுக்கு தோமாலை அர்ச்சனை சேவைகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக சேவை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் அதிகாலை மணி 12.45க்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக முதலில் கோவிலில் உள்ள சொர்க்கவாசலில் பிரவேசித்து எழுந்தருளினர். அப்போது பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை பிளந்தது.

இதனை தொடர்ந்து ஏழுமலையான் கோயில் ஜீயர்கள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், தேவஸ்தான உயரதிகாரிகள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வைகுண்ட வாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு, திருப்பதி கோவில் மற்றும் பக்தர்கள் கூடும் முக்கிய பகுதிகள் முழுவதும் டன் கணக்கான எடையுள்ள மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர மைசூரில் மின்சார சரவிளக்கு அலங்கார பணிகளை செய்யும் கலைஞர்களை கொண்டு மின் அலங்காரம் செய்யப்பட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் முழுவதும் மின்னொளியில் மிளிர்ந்தது. காண்பதற்கு இந்திரலோகம்போல் ஜொலித்த திருமலையை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.




Night
Day