திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன் - கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரா மாநிலம் திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன் பெறுவதற்காக  பக்தர்கள் குவிந்த நிலையில்,  கூட்ட நெரிசல் ஏற்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்த டோக்கன்களை வாங்குவதற்காக ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்திருந்தனர். அப்போது, கவுண்டரில் இருந்தவர்கள் திடீரென மெயின்கேட்டை  திறந்தனர். இதையடுத்து அனைத்து பக்தர்களும் முண்டியடித்துக்கொண்டு டோக்கன் வாங்குவதற்காக ஓடினர். இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அசம்பாவித்தில் சிக்கி 40க்கும் மேற்பட்ட பக்தர்கள்  படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ்கள் மூலம்  மீட்கப்பட்டு மருத்துவனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தால் அதிர்ந்து  போன பக்தர்கள் மருத்துவமனை வாளாகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இந்த சம்பவத்தில் தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் உயிரிழந்தார். தனது கண்முன்னே மனைவி கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்ததால், அவரது கணவர் கண்ணீர் மல்க அழுதபடியே நின்ற காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் பிள்ளைகளை கொரோனாவில் பறிகொடுத்த நிலையில், மனைவியும் கண்முன்னே உயிரிழந்தது மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா  என்ற பெண்ணும் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிபடுத்தினர். மேலும் பலியானவர்களின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பேட்டி அளித்த திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்வர், இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு இன்று திருப்பதியில் ஆய்வு செய்ய உள்ளார்.

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் எனது எண்ணங்கள், நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்தவர்களுடன் உள்தாகவும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டிருந்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும் என கூறியுள்ளார்.

கூட்ட நெரிசல் சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாக  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உதவ வேண்டும் எனவும் அவர் எக்ஸ் வலைதளத்தில் வலியுறுத்தியுள்ளார்.



Night
Day