எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் நடைபெற்ற தெப்பல் உற்சவம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் மூன்றாம் நாள் தெப்பல் உற்சவத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள தெப்பல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பர்மா தேக்கு மர தெப்பலில் ஐய்யங்குளத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருளி மூன்று முறை பவனி வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் தேவூரில் பிடாரி அம்மன் ஆலயத்தில் மார்கழி பிறப்பை முன்னிட்டு மகாசக்தி ஐயப்பன் சேவா சங்கம் சார்பில் 18ம் படி பூஜை விமரிசையாக நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் சுவாமி மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து பஜனை பாடல்கள் பாடி ஐயப்ப பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் ஐயப்பனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கீழரத வீதியிலுள்ள கடைக்கோவில் அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் ஆயிரத்து 8 தீப விளக்கு ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது. தலையில் அம்மன் கரகத்தை சுமந்தபடி, குலவையிட்டும், ஓம் காளி என்ற கோஷத்துடன் கைகளில் விளக்குகளை ஏந்தியபடியும் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்ற பெண்கள் முப்பிடாரியம்மன் கோவிலில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். இதனை தொடர்ந்து முப்பிடாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்திய பெண்கள் மழை வளம் வேண்டி அம்மனை மனமுருக வழிபட்டனர்.