எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் தேரோட்டத்தில் விநாயகர் தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவின் ஏழாம் நாளை முன்னிட்டு விநாயகர் மரத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சிவாச்சாரியார்கள் விநாயகர் தேரின் நான்கு சக்கரத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையருக்கு அரோகரா அண்ணாமலையார் அரோகரா என்ற பக்தி கரகோசத்துடன் தேரை வடம் பிடித்து நான்கு மாட வீதிகளில் இழுத்து வழிபட்டனர்.
முன்னதாக விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் கோவிலின் 16 கால் மண்டபம் அருகே நிற்க வைக்கப்பட்டுள்ள பஞ்ச மூர்த்திகளின் மரதேர்களில் தனித்தனியாக எழுந்தருளினர்.
திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் திருவிழாவில் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் 45 அடி உயரம் கொண்ட மரதேரில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் தேரின் நான்கு சக்கரத்திற்கு சிறப்பு பூஜை செய்த பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதிகளை சுற்றி முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கரகோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் மரத்தேரில் எழுந்தருளிய விநாயகர் தேர் நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து முருகப் பெருமான் தேர் புறப்பாடு நடைபெற்றது.