தைப்பூச திருவிழா: வெகு விமரிசையாக நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம், தீர்த்தவாரி, பால்குடம், காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. 

முருகனின் அறுபடை வீடுகளில் 3 ஆம் வீடாடன திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தைப்பூச கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில்  முத்துக்குமாரசுவாமி வள்ளி,தெய்வானை சமேதராக புறப்பட்ட முத்துக்குமாரசாமி கோவிலுக்கு எதிரில் அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினார்.  தொடர்ந்து விநாயகர், நவவீரர்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளும் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து தேருக்கு தீபாராதனை காட்டப்பட்ட பின் பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுக்க நான்கு ரத வீதிகளிலும் தேர் பவனி வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருளை பெற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள மன்சுரபாத் கிராமத்தில் உள்ள திருமுருகப் பெருமான் ஆலயத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அலகு குத்தியும், தேர் இழுத்தும் தங்கள் நேர்திக்கடனை செலுத்தினர்.

தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுந்தரபாண்டிய விநாயகர், பாகம்பிரியாள் மற்றும் சங்கர ராமேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு  அருள்பாளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூச திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், காமாட்சி அம்மன் ஒரு தேரிலும், பிரியாவிடை அம்மன், ஏகாம்பரேஸ்வரர், வள்ளி, தெய்வானை, முருகப்பெருமாள் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் தேவதானம்பேட்டையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, பூசாரியின் மீது மிளகாய் கரைசலால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், பூசாரியின் மார்பின் மீது உரலில் அரிசியிட்டு உலக்கையால் குத்தி அதனை பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. 

மயிலாடுதுறையில் தைப்பூச திருவிழாவையொட்டி மயூரநாதர் ஆலயத்தில் உள்ள  குமரன் கோயிலுக்கு பக்தர்கள்  காவடி எடுத்தும், பால்குடம் ஏந்தியும் ஊர்வலமாக வந்து  நேர்திக்கடன் செலுத்தினர். காவிரி ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில்  மேளதாளங்கள் முழங்க பக்தர்கள், பக்தி பரவசத்துடன் நடனமாடி  காவடிகளை எடுத்து வந்து கோயில் வளாகத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

புதுக்கோட்டை  மாவட்டம் மலைய கோவிலில்  உள்ள சுப்ரமணியசுவாமி மற்றும் திருவருட் காளீஸ்வரர்  கோயில்களில் தைப்பூச திருவிழாவையொட்டி, பக்தர்கள் பால் குடம் எடுத்தும், தீ மிதித்தும், மாவிளக்கு வைத்தும்  தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது.  

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே எஸ்.குளத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆறுமுக முருகப் பெருமான் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் புஷ்பக்காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, மஞ்சள் காவடி உள்ளிட்டவைகளை எடுத்து தங்கள் நேர்திக்கடனை செலுத்தினர். மேலும் 27 நட்சத்திர காவடிகளுக்கும் வேல்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு  தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் சூலத்தினை கையில் ஏந்தி ஈசான்ய குளத்தில் மூன்று முறை மூழ்கி எடுக்க தீர்த்தவாரி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் கபிலர் மலையில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூசத் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

Night
Day